விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக அதிமுக தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த காலங்களில் செய்த தவறுகள் மூலமாக சிறிது பாடம் கற்றுக்கொண்டு தி.மு.கவின் புதிய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி செய்வார் என்று மக்கள் கொஞ்சம் நம்பியிருந்தனர்.
அந்த நம்பிக்கை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. கடந்த வருடம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் அருகில் இருக்கும் சில மாவட்டங்களில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத தொடக்கத்தில் பலத்த மழை பெய்து விவசாயிகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் வருடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்ற சமயத்தில், இது போல பருவநிலை மாற்றத்தால் அதிக மழை பெய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டது.
இம்முறை விவசாயிகள் கடும் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தினோம். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது விவசாயிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய மக்களுடன் சேர்ந்து வரும் 22ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு டெல்டா மாவட்டங்களில் இருக்கும் தாலுகா அலுவலகங்களின் முன்பு மாபெரும் கண்டன போராட்டங்கள் நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.