சர்வதேச பயணம் மற்றும் குடியேற்றத்துக்கான மிகவும் பயனுள்ள இ-பாஸ்போர்ட் முறையை நோக்கி இந்தியா நகர்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சகமானது நேற்று வெளியிட்டது. புதிய அம்சங்கள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா ட்வீட் செய்துள்ளார். இ- பாஸ்போர்ட்டின் மையத்தில் உரிமையாளரின் பயோமெட்ரிக் தரவு அடங்கிய மைக்ரோசிப் இருக்கிறது. இது விமானப் போக்குவரத்து குறித்த சர்வதேச அமைப்பான சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கும்.
நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பாஸ்போர்ட் தயாரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இ-பாஸ்போர்ட் பாரம்பரிய பாஸ்போர்ட்டைப் போன்றது. எனினும் இ-பாஸ்போர்ட்டில் இணைக்கப்பட்டுள்ள சிப்பில் உரிமையாளரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இருக்கும். பயோமெட்ரிக் தரவு, பெயர், முகவரி மற்றும் பிற அடையாளம் காணக்கூடிய தகவல்கள் இருக்கிறது. இது உரிமையாளர் மேற்கொண்ட பயணங்கள் குறித்த தகவலை வழங்கும். சிப் உயர்மட்ட பாதுகாப்பை வழங்குகிறது. சிப் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தினால் விமான நிலையத்தில் சரிபார்ப்பு தேவையில்லை என்பதன் மூலமாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பயனடையலாம்.
சிப்பின் அம்சங்களில் மையமானது அதன் ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) மைக்ரோசிப் ஆகும். பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்ட சிப்பில் இருந்து அங்கீகரிக்கப்படாத தரவு எடுக்கப்படும் அபாயத்தைக் குறைக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சர்வதேச அளவில் பயணம் செய்பவர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் என்று அரசு தெரிவிக்கிறது. பொதுமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் பணியை தொடங்கும் முதல் கட்டமாக தூதர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 20,000 இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சோதனை வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு விரைவில் இ-பாஸ்போர்ட் வழங்கப்படும்.