தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் வருடந்தோறும் தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் NCERT நடத்தக்கூடிய இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது.
இதில் முதல் கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2வது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். இதையடுத்து தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலமாக மொத்தம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ1,250 உதவித்தொகையும், பின் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போது மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் Ph.D., படிப்புக்கு உதவித்தொகை பெறலாம்.
ஆனால் ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த நடப்பு கல்வியாண்டின் தேசிய திறனாய்வு தேர்வானது ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்கம் தெரிவித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா தாக்கம் அதிமாக இருப்பதால் 29ம் தேதி நடக்க இருந்த தேர்வு மீண்டும் பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை 25ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.