கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண்ணை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தனலட்சுமியின் தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் பலத்த வெட்டு காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தனலட்சுமி இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரிய வந்துள்ளது. மேலும் குமார் கையில் அரிவாளுடன் உட்கார்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வேலம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் குமாருக்கும் அப்பகுதியில் வசிக்கும் தனலட்சுமிக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனலட்சுமிக்கும் அப்பகுதியில் வசிக்கும் காட்டுராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த குமார் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் 2 பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் வேலைக்காக திருப்பூர் வந்துள்ளனர். இதற்கிடையே மகன் 2 பேரையும் கடையநல்லூரில் உள்ள தனலட்சுமியின் பெற்றோர் வீட்டில் விட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர் ஜே.ஜே.நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த குமார் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.