காட்டு யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லமுடி பூஞ்சோலை, தோனி முடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதன் பிறகு காட்டு யானைகள் ரேஷன் அரிசியை தின்றும், தூக்கி வீசியும் நாசப்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். ஆனால் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.