தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கோவில் கொடை விழா நடந்து வருவதால் தூத்துக்குடியிலிருந்து யானையை அழைத்து வந்துள்ளனர். இதற்காக யானை பாகன் யானையை அழைத்து வரும் போது கார்த்திக்கும் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் யானைப்பாகன் யானையை திருமலை கொழுந்துபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க வைத்துள்ளார். அப்போது அவருடன் நடந்து வந்த கார்த்திக் தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளார்.
இதில் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த கார்த்திக் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனையடுத்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கார்த்திக்கை தேடினர். ஆனால் கார்த்திக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ஆற்றில் எங்கு தேடியும் காரத்திக்கின் உடல் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து பாளை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.