ஆஸ்திரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுவதால் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிரேட்டர் சிட்னி, புளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரண்டு வாளி தண்ணீர் கொண்டுதான் வாகனங்களை கழுவ வேண்டும்; நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு அனுமதி பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரையும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்த மாகாண மக்கள் தண்ணீருக்காக கடும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தண்ணீர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள இவான் பிளைன்ஸ் நகரில் இருக்கும் பொது தண்ணீர் தொட்டியில் இருந்து, சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் எப்போது? எப்படி? தண்ணீரை திருடி சென்றனர் என்பது தெரியவில்லை. இது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள போலீசார் தண்ணீரை திருடியவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், யாராவது தண்ணீர் எடுத்து செல்வது குறித்து தெரிய வந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதே போன்ற தண்ணீர் திருட்டு சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொது தண்ணீர் தொட்டிகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.