தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. அவற்றை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் குழு நவம்பர் 16ம் தேதி பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து முதல்வர் முக. ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்தார். அதாவது கணக்கெடுப்பின் அடிப்படையில் 4.44 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 3.16 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 168.35 கோடி ரூபாய், முதல்வரால் விடுவிக்கப்பட்டது. அதன்பின் பயிர் நிவாரணம் தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு ஜனவரி 6ம் தேதி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விபரங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட கலெக்டர்கள் வழியாக, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாகவும், வங்கிகளின் விடுமுறை காரணமாகவும் நிவாரண நிதி விடுவிப்பதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. தற்போது வரையிலும் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணமாக 97.92 கோடி ரூபாய், 2.23 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே மீதம் உள்ள விவசாயிகளுக்கான நிவாரணம் நிதி 2 தினங்களில் வரவு வைக்கப்படும். இந்த தகவலை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.