நாகை மாவட்டம் குரவப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவரஞ்சனி. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவரின் உதவியுடன் தேடிச் சென்று சுமார் 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார். அந்த காலத்தில் இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான நெல் ரகங்கள் இருந்துள்ளது. ஆனால் தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள நெல் ரகங்களை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.
அதானால் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்த அளவிற்கு நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மன உறுதியுடன் இருப்பதாக சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். மேலும் அஸ்ஸாம் ,ஒரிசா, மேற்கு வங்கம் ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடுதலை அதிகபடுத்தி பால்குட வாழை, கடற்பாலி, வெள்ள குடவாழை உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் உள்ள தன்னுடைய வயலில் 40 சதுர அடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து தற்போது அந்த பயிர்கள் நன்றாக கதிர் விட்டு வளர்ந்து வருகிறது. அந்த கதிரை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உதவியாக தருவதாக கூறினார்.
மேலும் தங்க தம்பா, சொர்ணமுகி, வாடன் சம்பா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டசத்துக்களையும், உடைய நெல் ரகங்களையும் அவர் பயிரிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1,250 பாரம்பரிய நெல் வகைகளை இவர் பயிர்செய்து புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் சிவரஞ்சனி பாரம்பரியமான நெல் ரகங்களை வளரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதை என்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார். சிவரஞ்சனியின் இந்த செயல் தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.