தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என விசாரிக்கையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாகவும், ஆனால் சோதனை முடிந்து ரிப்போர்ட் வருவதற்குள் குணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறதாம். பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவியும் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. ஒரு வார காலம் வீட்டு தனிமையில் இருந்தால் பாதிப்பு சரியாகிவிடுகிறது. அதனால் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க பல மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிகமாக பாதிக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருக்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.