மலேசியாவை சேர்ந்த ராஷித் அகமது கனி என்பவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான “தேனாண்டாள் பிலிம்ஸ்” மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளி கடந்த 2018-ஆம் ஆண்டு ராஷித்-ஐ தொடர்பு கொண்டு “பேட்ட” படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகவும், படத்தின் விநியோக உரிமையை தங்களுக்கே தருகிறேன் என்றும் கூறி ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் “பேட்ட” படத்தின் உரிமை அவரிடம் இல்லை, முரளி பொய்யான தகவலை தான் கூறியிருக்கிறார் என்பது பிறகு தான் தெரியவந்துள்ளது. பின்னர் ராஷித் முரளியை தொடர்பு கொண்டு தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் முரளி ரூ.5 கோடி காசோலையும், ரூ.10 கோடி பணமும் மட்டுமே திருப்பி கொடுத்திருக்கிறார். மேலும் மீதியுள்ள பணத்துக்கு எங்களிடம் “நான் ருத்ரன்” மற்றும் “காஞ்சனா 3” உள்ளிட்ட படங்களின் உரிமை இருக்கிறது.
அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் ராஷித் அந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார். ஆனால் “நான் ருத்ரன்” படம் பாதியிலேயே கைவிடப்பட்டதும், காஞ்சனா 3 திரைப்படத்தின் உரிமை முரளியிடம் இல்லை என்பதும் பிறகு தான் தெரிய வந்துள்ளது.
அதேபோல் ரூ.5 கோடிக்கான காசோலை பணமானது அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து ராஷித் முரளியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது முரளி உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டும் விதமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஷித் தன்னுடைய பணத்தை திரும்ப தரக்கோரி காவல்நிலையத்தில் முரளி மீது புகார் அளித்துள்ளார்.