பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கமளித்தனர். மேலும் தரக் கட்டுப்பாடு தொடர்பான விவரங்களும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
விரிவான ஆய்வுக்குப் பின், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.