குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகோபாலும் அவரது மகன் மணிகண்டனும் அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க வலை விரித்துள்ளனர். அப்போது ராஜகோபால் எதிர்பாராதவிதமாக குளத்தில் தடுமாறி விழுந்து மூழ்கினார். இதனை பார்த்த மணிகண்டன் நீச்சல் தெரியாததால் தந்தையை காப்பாற்ற முடியாமல் கரையில் இருந்து கொண்டே கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் குளத்திற்கு வந்து ராஜகோபாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினர் குளத்தில் இறங்கி ராஜகோபாலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு ராஜகோபாலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.