மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில் ஆறுமுகம் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது செந்தில் ஆறுமுகத்துக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து செந்தில் ஆறுமுகம் மோட்டார்சைக்கிளை பல இடங்களிலும் தேடினார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் காட்டு தைக்கா பகுதியில் வசிக்கும் சதாம் உசேன் என்பவர் ஓட்டி செல்வதை சிலர் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காயல்பட்டினம் யு.எஸ்.சி மைதானம் அருகில் நின்றிருந்த சதாம் உசேனை செந்தில் ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிடித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சதாம் உசேனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செந்தில் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதாம் உசீனை கைது செய்ததோடு அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.