கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கார்சிலி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி பேருந்து நிலைய பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலச்சந்திரன் தனது கடைக்கு நடந்து சென்றபோது மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பிறகு அந்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி பாலச்சந்திரனிடம் இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் பாலச்சந்திரனிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றது உறுதியானது. இதனை அடுத்து சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.