கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இதுவரை தடை விதிக்கப் படவில்லை என்றாலும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத இருக்கை வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், பயணிகளின் தேவைகளை கருதி தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் முன்பதிவில்லா இருக்கை வசதி மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோவை -திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் திருப்பதி எக்ஸ்பிரஸ் (22616) ரயிலில் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் இந்த ரயிலில் 6 பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனைப் போலவே கோவை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் -கேஎஸ்ஆர் பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும். இவற்றில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பயணிகள் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு வரிசையில் மூன்று பேர் அமர்ந்து பயணிக்கும் படியாக உள்ள முன்பதிவில்லா இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தால் இதில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.