காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். காவல்துறையினர் குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
5800 காவல் ஆளிநர்களை அதிக அளவில் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் வேலைபார்க்கும் காவலர்கள் முதல் பல்வேறு பதவியில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களின் பணிச்சுமைக்கிடையே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் விடுப்பு பெற வழிவழியாக உதவி ஆய்வாளர், ஆய்வாளர் போன்றவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்து விடுப்பு பெறவேண்டும். இதையடுத்து ஆயுதப்படை அலுவலகத்தில் தினம்தோறும் நாட்குறிப்பில் முறையாக பதிந்து வரவேண்டும். இவ்வாறு செய்வது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
எனவே காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விடுப்பு செயலி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல ஆளிநர்கள் தங்களுடைய மொபைல் போனில் தமிழ்நாடு காவல் விடுப்பு என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக சமர்பிக்கலாம். இது வழி வழியாக அவர்களின் மேலதிகாரிகளுக்கு சென்றடையும். மேலும் விடுப்பு ஆணை பெற்றுக்கொண்ட காவலர்கள் நேரடியாக தங்களுடைய அலுவலகத்திற்குச் சென்று கடவுச் சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.
மேலும் இந்த செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிகளுக்கும் 3 மணிநேர கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க தவறினால் படிப்படியாக காவலர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயரதிகாரிகளை சென்றடையும். இந்த செயலியானது காவல் ஆளிநர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை குறைப்பதற்காக வெளிப்படைத் தன்மையை உருவாக்கிறது. மேலும் இணையதள வசதி இல்லாதவர்கள் இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள CLAPP V2 என்ற செயலி மூலம் மெசேஜ்-ல் விடுப்பு பெறும் வசதியை உருவாக்கப்பட்டுள்ளது.