நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
அதன் பின்னர் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையானது தொற்று பரவல் பொறுத்து நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசுப் பள்ளியில் 1-8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி,பருப்பு,உள்ளிட்டவற்றுடன் 5 முட்டைகளும் சேர்த்து வழங்கவேண்டும்.மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க சத்துணவுடன் சேர்த்து உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சத்துணவு பெரும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.