டிராக்டரின் பெட்டிகளை குறிவைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சிராப்பள்ளி பெரிய சுரம்பாளையத்தில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அதன் பெட்டியுடன் இணைத்து அவரது வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் பெரியசாமி டிராக்டரின் பெட்டியை மட்டும் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து டிராக்டர் மட்டும் நிற்பதை பார்த்த பெரியசாமி அதிர்ச்சியடைந்து உடனடியாக நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து டிராக்டர் பெட்டியை திருடியவரை தேடி வந்தனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பெட்டியை திருடியது பெரியபாளையம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் சிவக்குமார் குறிவைத்து டிராக்டரின் பெட்டிகளை திருடி அதனை விற்பனை செய்வது தெரியவந்தது. இந்நிலையில் பெரியசாமி டிராக்டர் பெட்டி உள்பட 3 பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.