ஈராக் நாட்டின் ராணுவ முகாமில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாக்தாத் நகரிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தியாலா மாகாணத்தில் உள்ள அல் ஆசிம் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ராணுவ முகாமிற்குள், நேற்று அதிகாலை நேரத்தில் அதிரடியாக தீவிரவாதிகள் நுழைந்தனர். அதன்பின், வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது ராணுவ வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தார்கள். இக்கொடூர தாக்குதலில் 11 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்தில் ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரமான தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தப்பி ஓடிய ஐஎஸ் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.