தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, மாணவியின் தந்தை முருகானந்தம், தன் மகளின் நிலையை தெரிந்துகொண்டு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு காவல் துறையினர், லாவண்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி, விடுதியில் தன்னை வேலை செய்ய வார்டன் கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து விஷம் அருந்தியதாக கூறியிருக்கிறார்.
அதன்பிறகு, காவல்துறையினர் விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தார்கள். இதனிடையே மாணவி லாவண்யா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார். அதன்பிறகு தான், மதம் மாற மாணவியை கட்டாயப்படுத்தியதாகவும், அதனை மறுத்ததால் கழிவறையை கழுவ கட்டாயப்படுத்தியதும் தெரியவந்தது.
எனவே, மாணவி லாவண்யாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா, மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தி வேலை வாங்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.