பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கீழத்தெருவில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியின் அறைகளை சுத்தம் செய்ய சொல்லி வார்டன் வற்புறுத்தியதால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து விட்டார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் லாவண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விடுதியின் வார்டன் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட லாவண்யாவின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிகமாக திட்டி வேலை வாங்கியுள்ளனர். இதனால் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். எனவே பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகானந்தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கூறும்போது, சிகிச்சையின்போது லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. ஆனால் லாவண்யாவின் பெற்றோர் மதமாற்றம் தொடர்பாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.