சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி…
- ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும்.
- காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.
- பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டாலோ அல்லது வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ ஒலிபெருக்கிகள், அவை சம்பந்தப்பட்ட கருவிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,
- பதாகைகள், சுவரொட்டிகள், சின்னங்கள் வரைதல் உள்ளிட்டவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது இடங்களில் சுவர்கள் உள்ளிட்டவை தனியாருக்குச் சொந்தமானது என்பதால், அத்தகைய இடங்களில் உரிமையாளர்கள் அனுமதி இருந்தாலும் எழுதுவதோ, சுவரொட்டிகள் ஒட்டுவதோ கூடாது.
சுவர்களில் எழுதுவதும், சுவரொட்டிகள் ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.