மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு நிவாரணமாக வெறும் ரூ.168.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,16,837 விவசாயிகள் பயன் பெறுவர் எனக் கூறப்படுகிறது. இந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது.
4,44,988 ஏக்கருக்கு ரூ.168.35 கோடி என ஒதுக்கீடு செய்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.3,783, அதாவது ஒரு விவசாயிக்கு ரூ.5,313 மட்டும் தான் இழப்பீடாக கிடைக்கும். இந்த தொகை எந்த வகையிலும் நஷ்டத்தை ஈடு செய்யாது மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அவர்கள் முதலீடு செய்த பெரும் தொகையால் அவர்களுக்கு நஷ்டம் அதிகரிக்கும். இதனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.