இந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தித் தேவையைவிட குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் சமையல் எண்ணெய் விலைகளை அதிகரித்துவிட்டன. இந்த விலையேற்றம் காரணமாக இந்தியச் சந்தைகள் பாதிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக இந்தியச் சந்தை நிபுணர் சலில் ஜெயின் கூறும்போது, “இது தற்காலிக விலையேற்றம்தான். விலை தொடர்ந்து அதிகரிக்கக் கூடும். இந்த விவகாரத்தில் நாடு தன்னிறைவு பெற விரும்பினால் விவசாயிகளுக்குச் சிறந்த விலையை வழங்க வேண்டும். சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்கும்” என்றார்.
அடுத்த ஆண்டு இந்தோனேசியா, மலேசியாவில் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கப்பட உள்ளது. இதனால் அந்நாடுகளில் சமையல் எண்ணெய் நுகர்வு அதிகரிக்கும். இதனால் அடுத்த ஆண்டு சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் மத்திய வேளாண்மை, உழவர் நல அமைச்சகம் வெளியிட்ட விதை தரவுகளின்படி, எண்ணெய் வித்து பயிர்களின் பரப்பளவு இந்தாண்டு 68.24 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.47 லட்சம் ஹெக்டேர் குறைவாகும்.
உற்பத்தியை பொறுத்தமட்டில் கடந்த காரிஃப் பருவத்தில் முக்கிய எண்ணெய் வித்து பயிர் சோயாபீனில் கடந்த ஆண்டைவிட நாட்டில் சுமார் 18 விழுக்காடு குறைந்து இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சோயாபீன் சங்க (சோபா) மதிப்பீடுகளின்படி, நாட்டில் சோயாபீன் உற்பத்தி இந்த ஆண்டு 89. 94 லட்சம் டன் ஆகும்.
இது முந்தைய ஆண்டின் 109.33 லட்சம் டன் உற்பத்தியை விட 71.73 சதவீதம் குறைவாகும். இவ்வாறான சூழலில், கடந்த இரு மாதங்களாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்துவருவது நினைவுகூரத்தக்கது.