நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தேசிய அளவில் 2 லட்சம் பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. ஆனால் தற்போதைய 3-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இதுவரை மாநில அரசு நேரடியாக ஊரடங்கை அமல்படுத்தவில்லை. கொரோனா தாக்கத்தைப் பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்களது ஊழியர்களோ, அவர்களது குடும்ப உறுப்பினர்களோ, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்ப செல்லும் போது, அரசு ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ அறிக்கையின் நகல் அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்ததற்கான வட்டார மருத்துவரின் சான்றிதழை தங்களுடைய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.