ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களுக்கு பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகின்றது.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் நேற்று இரவு முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் உணவகங்களில் பார்சல் வாங்கி கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் பத்திரிகைகளுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் எப்போதும் போல் வழக்கமாக செயல்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.