“கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை” மூலம் வருடந்தோறும் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இது இந்தியாவிலேயே மிக உயரிய விருது ஆகும். அதற்கான காரணம் என்னவென்றால் இந்த விருதில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வெண்கலத்தாலான கருணாநிதியின் உருவச் சிலையும் அடங்கி இருக்கும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற உடன் “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்” வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த நிறுவனத்தின் 8 வது ஆட்சிக்குழு கூட்டம் 30.8.2021 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுகளுக்குரிய 10 விருதாளர்களை பட்டியலிட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் 10 விருதாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2011ஆம் ஆண்டுக்கான விருது பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர் சென்னை பல்கலைக்கழகம்), 2012 ஆம் ஆண்டுக்கான விருது கு.சுந்தரமூர்த்தி (முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்), 2013 ஆம் ஆண்டுக்கான விருது மருதநாயகம் (முன்னாள் இயக்குனர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்), 2014 ஆம் ஆண்டுக்கான விருது மோகனராசு (முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் திருக்குறள் ஆய்வு மையம் சென்னை பல்கலைக்கழகம்), 2015ஆம் ஆண்டுக்கான விருது மறைமலை இலக்குவனார் (முன்னாள் பேராசிரியர் வரலாற்றுத்துறை புதுவை பல்கலைக்கழகம்), 2018ம் ஆண்டுக்கான விருது கவிஞர் ஈரோடு தமிழன்பன் (முன்னாள் தமிழ் பேராசிரியர் புது கல்லூரி) 2019 ஆம் ஆண்டுக்கான விருது சிவமணி (முன்னாள் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருது வழங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழின் சிறப்பினையும் தமிழுக்காக கலைஞர் கருணாநிதி ஆற்றிய தொண்டையும் சிறப்புறக் கூறி மகிழ்ந்தார். குறிப்பாக செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழி தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள் பலரும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.