தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடப்பாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.