குளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் உள்ள திக்குப் பேரிகுளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் நித்திய செல்வி, காவல்துறையினர், சேரன்மகாதேவி பேரூராட்சியினர் மற்றும் கால்நடை மருத்துவத் துறையினர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
அதில் மாடுகள் இறந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தண்ணீரில் மிதந்த 5 மாடுகளை கரைக்கு இழுத்துக் கொண்டு வந்தனர். அதன்பின் கால்நடைத்துறை மருத்துவர்கள் இறந்த மாடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அருகில் புதைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.