அபுதாபி ராணுவம் நடுவானில் ஏவுகணையை அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 சக்தி வாய்ந்த ஏவுகணையை அபுதாபி மீது செலுத்தி உள்ளனர். ஆனால் அபுதாபி ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடுவானில் வைத்து முறியடித்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏமன் கூட்டு படையினர் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.