பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஹர்டியா என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் பாஜக கட்சியை சேர்ந்த அமைச்சர் நாராயன் பிரசாத்துக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் மட்டை பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சருடைய மகன் பப்லு குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவர்களை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் சிறுவர்களை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து அமைச்சர் நாராயன் பிரசாத் வீட்டிற்கு சென்று அவரது காரை அடித்து நொறுக்கி பப்லு குமாரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் நாராயன் பிரசாத் கூறியதாவது “என் நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். இதனை தடுப்பதற்காகவே எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் கிராம மக்கள் எனது மகனையும் தாக்கி எனது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.