கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரின் மகளுக்கும் காட்டுபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்து திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருமணத்திற்கு முந்தைய நாளில் வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்ததால் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது. அந்த சமயத்தில் மணப்பெண் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆடியுள்ளார்.
இதனை கண்ட மணமகன் ஏன் இப்படி செய்கிறாய் என்று மணமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மற்றும் அவரின் தந்தை திருமணத்திற்கு முன்னரே இவ்வாறு நடந்து கொண்டால் எப்படி என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஒருகட்டத்தில் மணமகள் நான் இவரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் மணமகளின் பெற்றோரும் உறவினர்களும் இரவோடு இரவாக உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து நிச்சயக்கப்பட்ட முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த செய்தியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் முதல் மாப்பிள்ளையான ஸ்ரீதர் பண்ருட்டியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது “இரண்டு பேர் வீட்டிலும் கலந்து பேசி தான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் டிஜே பார்ட்டி நடத்தப்பட்டது. அதற்கு எங்களையும் விருந்தினர்களாக அழைத்திருந்தனர். நாங்களும் கலந்து கொண்டோம். அந்த பார்ட்டியில் மது விருந்தும் நடைபெற்றது. மணமக்கள் நாங்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போது பெண் வீட்டை சேர்ந்த சிலர் குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மணப்பெண்ணின் தோள் மீது கையை போட்டு கொண்டு சிலர் நடனம் ஆடினர். அது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் நான் மணப்பெண்ணே அடிக்கவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை என்று நான் அந்த பெண்ணிடம் கூறினேன். அதற்கு அவளுடைய அப்பா அம்மா அனைவரும் என்னுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னை அடிக்கவும் செய்தார்கள். இதற்கான வீடியோ ஆதாரத்தை நான் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன். மேலும் நான் இந்த திருமணத்திற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளேன். அதனை பெற்றுத் தரவேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.