தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் விளைவாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்கலை கழகம், கல்லூரிகள் சார்பில் தொலைநிலை கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்விக்கான சான்றிதழ், பட்டபடிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு யு.ஜி.சி தொலைநிலை கல்விக்கான ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்காக விதிமுறைகளை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சில கல்வி நிறுவனங்கள் வெளி நபர்கள் மற்றும் தனியாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இது குறித்த புகார் யு.ஜி.சிக்கு கிடைத்துள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி உயர்கல்வி நிறுவனங்கள் வெளி நபர்கள் அல்லது தனியார் மூலமாக வகுப்புகளை நடத்த கூடாது என்று யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி எச்சரித்துள்ளது.