இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மீனவர்கள் 56 பேர் வேதாரண்யம் கடற் பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி ,அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்த வாக்கிடாக்கி, செல்போன், பேட்டரி மற்றும் டீசல் போன்றவற்றை பகிரங்கமாக பறித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயமாகும். தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள் தமிழக கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு மீனவர்கள் கொண்டு சென்ற விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உட்பட சுமார் 150 படகுகளை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அந்த படகுகள் அனைத்தையும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அதோடு மத்திய அரசு இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்திய
மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அபகரித்து வருவது ஒரு நியாயமற்ற செயலாகும். ஒருபுறம் இந்திய அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்டு இலங்கை தமிழக மீனவர்களை கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறது மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வருகிறது இது செய்நன்றி மறந்த செயல்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.