குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர்.
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளதால் காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
இதனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, பேரணியின்போது வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
எனவே, வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காக இந்த சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்புக் கேமராக்களையும் காவல் துறையினர் சரி செய்து வருகின்றனர்.இந்த பேரணியில், கலவரம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் முன்கூட்டியே நுழைந்துவிடாத வகையில் காவல் துறையினர் சாலைகளை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.