குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நடிகர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்தினைக் கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் வீட்டை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மத்திய, மாநில அரசின் செயல்களால் எங்களின் போராட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.