கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தில் கெம்பேகவுடா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் நேற்றைய முன்தினம் அன்று ஒரு கார் ஷோரூமுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவரின் அழுக்கு உடையை பார்த்த ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு விவசாயி கெம்பேகவுடா சரக்கு வேனை வாங்குவதற்கு வந்துள்ளேன் என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள் உங்களிடம் 10 ரூபாய்இருக்கிறதா …? என்று கேட்டு கேலி செய்துள்ளனர்.
அத்துடன் உங்களுக்கு அரை மணி நேரம் தருகிறோம், அதற்குள் ரூ 10 லட்சத்தை கொடுத்துவிட்டு சரக்கு வேனை வாங்கி செல்லுங்கள் என்று ஊழியர்கள் விவசாயியிடம் சவால் விட்டுள்ளனர். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா கிராமத்தில் வசிக்கும் தன் மாமாவான ராம ஆஞ்சநேயாவுக்கு செல்போனில் தொடர்புகொண்டு உடனே ரூ 10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு வரும்படி கூறியுள்ளார். அதன்படி ராம ஆஞ்சநேயாவும் ரூ 10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு சென்றார். இதனையடுத்து அப்பணத்தை ஊழியர்களிடம் கெம்பேகவுடா கொடுத்தார். இதன் காரணமாக ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில் பல்வேறு காரணங்களை கூறிய ஷோரூம் ஊழியர்கள் 2 நாட்களுக்கு பிறகு சரக்கு வேனை டெலிவரி தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த கெம்பேகவுடா ஷோரூம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கெம்பேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் தங்களது தவறை உணர்ந்த ஷோரூம் ஊழியர்கள் கெம்பேகவுடாவிடம் மன்னிப்பு கேட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயி கெம்பேகவுடா இந்த ஷோரூமில் தான் கார் வாங்க வேண்டும் என்று கூறிவிட்டு, தான் கொண்டு வந்த 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.