தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி கொரோனா தொற்று ஒரே நிலையில் நீடிக்கும் சூழலில் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பொதுவாக ஒமிக்ரான் பரவலின் தன்மையை பொறுத்தளவு, உச்சமடைந்து அதற்கு பின் குறையாது.
இதனிடையில் மருத்துவ வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக ஒமிக்ரான் பரவல் பன்மடங்கு பரவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கொரோனா ஒரு நாள் பாதிப்புகள் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த எண்ணிக்கையானது அடுத்த ஒரு சில நாட்களிலேயே 30 ஆயிரமாக மாறியது. அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தினசரி பாதிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இதனிடையில் மாவட்டந்தோறும் தினசரி நோய் தொற்று ஏற்றம், இறக்கம் கண்டு வந்தாலும் ஒட்டு மொத்த அளவில் பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரடங்கு முடிவுகள் தொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் அறிவுரைப்படி முதல்வர் மேற்கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் தான் எடுக்கப்படும். இப்போதுள்ள நிலைமையின்படி, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு மட்டுமே போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் மாநிலம் முழுவதும் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அப்போதுள்ள நிலைமையை கண்காணித்த பின்பு தான் முடிவு செய்யப்படும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.