மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்பார்த்தது போலவே தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக அதிமுகவிற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் ஊராட்சி தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் கிராமசபை. எனவே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது.
ஏற்கனவே ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை நடத்த போவதாக 7 நாட்களுக்கு முன்பே உள்ளூர் மக்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு ஊராட்சி தலைவர்கள் திட்டத்துடன் இருந்தனர். ஆனால் தமிழக அரசு அதற்கு தடை விதித்திருப்பது அரசியல் சாசன அவமதிப்பு. அதேபோல் தமிழக அரசு இந்த கொரோனா காலத்திலும் டாஸ்மாக் கடைகளை பாதுகாப்பாக நடத்துகிறது.
ஆனால் கிராமசபை என்று வரும் போது மட்டும் தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டுவது சரியல்ல. திமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக கிராமசபை ரத்து என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கேட்டுக்கொள்கிறது” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.