குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என ஒன்றாகத் திரண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுபுறம் பாஜக, இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் சார்பாக, “குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி” என்ற தலைப்பில் பேரணி நடத்த திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. நாளை நடக்க உள்ள திமுக பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து தொடங்கி பாந்தியன் சாலை வழியாக ருக்குமணி லட்சுமிபதி சாலையில் அமைத்துள்ள ராஜரத்தினம் அரங்கம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பேரணியில், திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதை தவிர திமுக தோழமை கட்சிகள், அமைப்புகள் போன்றவையும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக பேரணிக்கு சென்னை மாநகர காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக திமுக தரப்பில் தெரிவிக்கையில், ‘நாளை நடைபெறவுள்ள பேரணிக்காக கோரியிருந்த அனுமதியை காவல் துறையினர் வழங்கவில்லை. ஒருவேளை அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதன் பின்பும் அனுமதி கிடைக்காத பட்சத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறப்படுகிறது.