லண்டனில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திய நபரை தடுக்க அவர் மீது வாகனத்தை மோதச் சென்ற இளைஞர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் வடமேற்கு பகுதியில் இருக்கும் Maida Vale என்னுமிடத்தில் ஒரு நபர், ஒரு பெண்ணை குழந்தைகள் பள்ளி செல்லக்கூடிய வழியில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். குழந்தைகள் பதறிக்கொண்டு ஓடியுள்ளனர். அந்த பெண் அலறியதால், அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் காப்பாற்ற முயன்ற போது, அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில் வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், அவர் மீது மோதி அந்த பெண்ணை காப்பாற்றிவிடலாம் என்று நினைத்து, வாகனத்தை கொண்டு மோதியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணும் வாகனத்தின் அடியில் சிக்கிவிட்டார். அதன் பின்பு அங்கு வந்த மருத்துவ உதவிக்குழுவினர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
இதனிடையே வாகனம் மோதி, கத்தியால் குத்திய நபரும் உயிரிழந்து விட்டார். எனவே, வாகனத்தை ஓட்டிய 26 வயது இளைஞர் கைதாகி விட்டார். அவர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவாகியுள்ளது.
எனிலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பெரிய கத்தியை வைத்திருந்த அந்த நபரை தங்களால் தடுக்க முடியவில்லை எனவும் வாகனத்தை கொண்டு வந்த நபர் தான் அவரைத் தடுக்க முயன்றார் என்றும் கூறியிருக்கிறார்கள்.