இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்களைக் குவித்தது. நிக்கோலஸ் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் இப்போட்டியின் மூலம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான நவ்தீப் சைனி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 316 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல். ராகுல் (77), ஸ்ரேயாஸ் ஐயர் (7), ரிஷப் பந்த் (7), கேதர் ஜாதவ் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 38.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை மட்டும் எடுத்தது.
இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு 67 பந்துகளில் 88 ரன்கள் தேவைப்பட்டன. சேஸிங்கில் எத்தனையோ முறை இதுபோன்ற சூழ்நிலையில், தனது சிறப்பான பேட்டிங்கால் மேட்சை ஃபினிஷ் செய்த கேப்டன் கோலி, இன்றைய ஆட்டத்திலும் தான் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துக்காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கோலி 85 ரன்களில் கீமோ பவுலின் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.
இதனால், இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், களமிறங்கிய ஷர்துல் தாகூர் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக பேட்டிங் செய்ய, இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக அமைந்தது. மறுபக்கம் ஜடேஜாவும் சிறப்பாக விளையாட, இந்திய அணி 48.5 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்களை எட்டி, இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஷர்துல் தாகூர் ஆறு பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடனும், ஜடேஜா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பவுல் மூன்று, ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
Ravindra Jadeja ends on 39* as India win by four wickets! 👏
India take the series 2-1 in a dramatic finish 🏆 #INDvWI pic.twitter.com/3HYcIvbZDV
— ICC (@ICC) December 22, 2019
T20I series ✅
ODI series ✅Early X-mas presents for the fans as India end 2019 on a high.#INDvWI #TeamIndia @paytm pic.twitter.com/0pevT671RF
— BCCI (@BCCI) December 22, 2019
CHAMPIONS 👑👑#INDvWI #TeamIndia @paytm pic.twitter.com/HqR5lvT2Ng
— BCCI (@BCCI) December 22, 2019