இரண்டாம் உலக போரில் காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போனது. 1945 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குன்மிங்கில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் வானிலை சரியில்லாத காரணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இமய மலையில் மாயமானது. அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் முயற்சி மேற்கொண்டார். அவர் நியூயார்க் நகரைச் சேர்ந்த பில் ஸ்கேர் ஆவார். அவர் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ்ஸிடம் பணியைக் கொடுத்தார்.
அதற்காக குஹ்லெஸ் ஒரு குழுவை அமைத்து தேடும் பணியை தொடங்கினார். இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து மிகுந்த இடத்தில் தேடுதல் பணியை நடத்தினார்கள். கடும் போராட்டத்திற்குப் பிறகு உறை பனி மூடிய இடத்தில் விமானத்தின் பாகத்தை கண்டுபிடித்துள்ளார்கள். விமான வால் பகுதியில் உள்ள குறியீட்டு எண்ணை கொண்டு அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிதைந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என அவர் கூறியுள்ளார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.