Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ், தமிழ்நாடு என்றால் கசக்கிறது – பாஜக அரசை வெளுத்து வாங்கிய முதல்வர் ..!!

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், நமக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து நாம் இதனை செய்தாலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழுக்காக போராடியும், வாதாடியும் கோரிக்கை வைத்துக் கொண்டும் இருக்கின்றோம்.

மாநில ஆட்சி மொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஆக்க தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் இன்றைக்கும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என்று வாதாடி வருகின்றோம்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வலம் வரவேண்டும் என்று விளங்கி வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவை அனைத்தும் தான் நாம் யார் ? என்பதற்கான அடையாளம், மறந்துவிடக்கூடாது. தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையிலே நாம் எதிரிகள் அல்ல.

நாம் இந்தியை எதிர்க்க வில்லை. இந்தியின் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம். இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பை எதிர்க்கின்றோம். நாம் தமிழ் மொழி பற்றாளர்களே தவிர, எந்த மொழி மீதான வெறுப்பாளர்கள் அல்ல. ஒருவர் ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது, அவர்களது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பைத் தூண்டும் வகையில் அது திணிப்பாக மாறி விடக்கூடாது.

அதனால் இந்தியை திணிக்க நினைப்பவர்கள்,  அதனை ஆதிக்கத்தின் குறியீடாகவே திணிக்கின்றார்கள். ஒரே ஒரு மதம் தான் இருக்கவேண்டும் என்று நினைப்பது போல, ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும். அது இந்தியாக  தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியை திணிப்பது மூலமாக இந்தி பேசும் மக்களை அனைத்து துறைகளிலுமே திணிக்கிறார்கள்.

இந்தியை திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசக்கூடிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்ற  நினைக்கிறார்கள். ஒருவனின் தாய்மொழி இடத்தை பறித்து, அந்த இடத்தில் இந்தியை  உட்கார வைக்க பார்க்கிறார்கள். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை தொடர்ந்து நாம் எதிர்த்து கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு தமிழ் என்றால்…  தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது என மத்திய அரசை ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |