ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக 30 தொகுதிகளிலும் ஏ.ஜே.எஸ்.யு மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் ஜே.வி.எம் கட்சி மூன்று தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. ஜே.வி.எம் கட்சியுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் ஹேமந்த் சோரன், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அரசியல் குழப்பம் இங்கும் நிலவும் எனக் கூறப்படுகிறது.