யுனிலீவர் என்ற பன்னாட்டு நுகர்ப்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனமானது இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்னும் பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்காக நிர்வாகப்பிரிவில் உள்ள மூத்த பணியாளர்கள் 15% பேர் மற்றும் இளநிலை பணியாளர்கள் 5% பேரை வேலையிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளப்பக்கத்தில், அதன் தலைமை செயல் அதிகாரியான ஆலன் ஜாப் தெரிவித்திருப்பதாவது, இந்த நடவடிக்கை மறு ஆலோசனை செய்யப்படும். வீட்டு உபயோக பொருட்கள், ஐஸ்கிரீம், ஊட்டச்சத்து பொருட்கள், அழகு சாதனங்கள் தயாரிப்பு போன்ற நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நுகர்வோருக்கு சிறந்த சேவையை கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறது. மேலும், கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனத்தின் ஒரு பிரிவை பெறும் முயற்சியில் இந்நிறுவனம் தோல்வியை சந்தித்தது.
எனவே, ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவில் பணியாற்றும் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்பது விரைவில் தெரியும்.