இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21 குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது.
அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின்பு முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், இந்திய குடியரசு தினத்திற்கு அமெரிக்க அரசு வாழ்த்து தெரிவித்திருக்கிறது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜென் சாகி கூறியிருப்பதாவது, “குடியரசு தினத்தை சிறப்பிப்பதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவுடன் நாங்கள் சேர்கிறோம்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த சமயத்தில், இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உறவு பலமாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இது மொத்த உலகத்திற்கும் பயனை தரும்” என்று கூறியிருக்கிறார்.