தமிழகத்திலுள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக ரேஷன் அட்டைகள் விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனே பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை வரும் 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வந்ததால், ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒருசில ரேஷன் கடைகளில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ரேஷன் அட்டைதாரர்கள் கூறியிருப்பதாவது, அரிசி லோடு கடைக்கு வரவில்லை.
லோடு வர கிட்டத்தட்ட 3 நாட்கள் ஆகும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை மட்டும் இருக்கிறது. அதனை தற்போது வாங்கி செல்லுங்கள். 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு அரிசி வாங்கிக் கொள்ளுங்கள் என்று ரேஷன் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் 3 நாட்களுக்கு பிறகு அரிசி வாங்க வந்தபோது, இன்னும் 2 நாட்கள் ஆகும் எனவும் லோடு வரவில்லை எனவும் ஊழியர்கள் மீண்டும் கூறுகின்றனர். எனவே எப்போது அரிசி வரும் என்பதே தெரியவில்லை. இந்த மாதம் முடிய 4 நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் அரிசியே வழங்கவில்லை. இதனிடையில் எப்போது மண்ணெண்ணெய் வழங்கப் போகிறார்களோ…? என்று அவர்கள் கூறினர்.