Categories
மாநில செய்திகள்

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ 1,00,00,000 வழங்கினார் முதல்வர் ஈபிஎஸ்..!!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் தருமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்ததன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

Image

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் அரசின் பங்குத் தொகையான ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோல், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று தமிழ் இருக்கைக்காக தனது சொந்த நிதியில் இருந்து 7 லட்சம் வழங்குவதாக அறிவித்த, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும், சாம் கண்ணப்பனிடம் 7 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 7 லட்சம் ரூபாய் வழங்கினார் துணை முதல்வர்

இந்நிகழ்வின்போது, அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் , விஜிபி தமிழ் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்படும் இத்தொகையானது, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இருக்கை அமைப்பது தொடா்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஒப்பளிப்பு செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்று அரசுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும், காலதாமதம் ஏற்பட்டால் பெறப்பட்ட நிதியுதவித் தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்கு திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |